சேதமடைந்த பள்ளி கட்டிடம்
வேடசந்தூர் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சி தேவநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி அருகே உள்ள மற்றொரு பள்ளி கட்டிடத்தில் வகுப்பறை செயல்படுகிறது. சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, கவுன்சிலர் உமாமகேஸ்வரி பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அங்குள்ள சத்துணவு கூடத்தில் முறையாக உணவு சமைத்து வழங்கப்படுகிறதா? என்றும் அவர்கள் ஆய்வு செய்தனர்.