ஒரே நாளில் சேதம் அடைந்த தார்ச்சாலை
தேனியில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஒரே நாளில் தார்ச்சாலை சேதம் அடைந்தது. தரமற்ற முறையில் அமைப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
சாலை சீரமைப்பு
கொச்சி-தனுஷ்கோடி சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் ரூ.25 கோடி செலவில் சுமார் 23 கி.மீ. தூரம் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் சில நாட்களாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை சீரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை சீரமைப்பு பணிகள் நடந்தது. சாலை அமைக்கப்பட்ட மறுநாளே கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் சில இடங்களில் சேதம் அடைந்து பள்ளமாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் சாலையில் ஒட்டுப்போடப்பட்டது.
ஒரே நாளில் சேதம்
இதேபோல், பழனிசெட்டிபட்டியில் நேற்று முன்தினம் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட சாலை ஒரே நாளில் சேதம் அடைந்து விட்டது. பஸ் நிறுத்தம் முதல் தண்ணீர் தொட்டி வரை பல இடங்களில் சாலை சேதம் அடைந்தது. அந்த இடங்களில் ஒட்டுப்போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில் வெள்ளை நிறக்கோடுகள் வரையப்படாமலும் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் பணி ஒப்பந்தம் விடப்பட்டு நடந்து வரும் இந்த பணிகளை அதிகாரிகள் முறையாக மேற்பார்வையிட்டு, தரமாக சாலை அமைக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். சேதம் அடைந்துள்ள இடங்களில் முறையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.