சேதமடைந்த பயணிகள் நிழலகம்
அதிராம்பட்டினத்தில் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் நிழலகம்
அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையில் சுப்பிரமணியர் கோவில் தெருவில் பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகத்தை அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் கட்டுமாவடி, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், போன்ற நகர பகுதிகளுக்கு செல்ல முக்கிய வழித்தடத்தில் இந்த பயணிகள் நிழலகம் அமைந்துள்ளதால், இங்கு எப்போதும் கூட்டமாக இருக்கும்.
சேதமடைந்துள்ளது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதிராம்பட்டினம் சாலை விரிவாக்க பணிக்காக சாலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் நிழலகம் பள்ளத்தில் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
பயணிகள் அமரும் இருக்கைகள் மற்றும் முகப்பு பகுதி பழுதாகி உள்ளதால் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள், பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தாமல் சாலையோரத்தில் நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர்.
சீரமைக்க வேண்டும்
வெயில், மழை நேரங்களில் முதியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தில் ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட்டை அகற்றிவிட்டு கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.