தேவிபட்டினம் அருகே பாத்திகளில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி பாதிப்பு
தேவிபட்டினம் அருகே பாத்திகளில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பனைக்குளம்
மழைக்காலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழில் அதிகமாகவே நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆனைகுடி, தேவிபட்டினம், கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்வதற்கான ஏராளமான பாத்திகள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடைகால சீசன் தொடங்கியதும் உப்பு உற்பத்தியும் தொடங்கிவிடும்.
வழக்கமாக பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்துடன் உப்பு உற்பத்தி பணி முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த மாதம் வரையிலும் போதிய மழை இல்லாததால் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெற்றது.
உப்பு உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் தேவிபட்டினம், கோப்பேரிமடம், சம்பை பத்தநேந்தல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கோப்பேரிமடம் பகுதியில் உள்ள பாத்திகளில் கல் உப்புகளுடன் சேர்ந்து மழைநீரும் கலந்து தேங்கியபடி நின்றன. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், பாத்தி அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்புகளும் மழை நீரில் கரைந்து ஓடின.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் தேவிபட்டினம், கோப்பேரிமடம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.