ஏரி நிரம்பி கரை உடைந்ததால் 250 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
பர்கூர் அருகே தொடர் மழைக்கு ஏரி நிரம்பி கரை உடைந்ததால் 250 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது.
பர்கூர்:
பர்கூர் அருகே தொடர் மழைக்கு ஏரி நிரம்பி கரை உடைந்ததால் 250 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது.
ராயல் ஏரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மோடிகுப்பம். இக்கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
விவசாயிகள் நெல், ராகி, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ராயல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரமாகவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கிறது.
நெற்பயிர்கள் சேதம்
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த பகுதியில் பரவலாக பெய்த மழையால், ராயல் ஏரிக்கு தண்ணீர் அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, மோடிகுப்பம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதனால் இந்த ஏரி நிரம்பியது. இதன் காரணமாக ஏரியின் கரைகள் உடைந்து, தண்ணீர் நெல்வயல்களில் புகுந்து அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. மோடிகுப்பம் பகுதியில் 250 ஏக்கர் பரப்பில் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள ராயல் ஏரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணிகளின் கீழ் தூர்வாரப்பட்டது. தூர்வாரும் பணியின் போதே, சீராக பணிகள் மேற்கொள்ளவில்லை என புகார் தெரிவித்தோம். கரைகள் பலப்படுத்தாமல் விட்டுவிட்டனர். ஏரியின் ஒரு புறத்தில் கரையை உயர்த்தி கட்டவில்லை. ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை.
இழப்பீடு தர வேண்டும்
இந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ராயல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு ஏரி நிரம்பி, கரைகள் உடைந்து தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் ஓரிரு நாளில் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. நெல் வயலில் 2 அடிக்கு தண்ணீர் நின்றதால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் மூலம் 250 ஏக்கர் நெல்வயல்கள் சேதமடைந்துள்ளது.
இதேபோல், ராகி மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்ட தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. விவசாயிகளுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை அலுவலர்கள் எங்கள் பகுதியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரியின் கரைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். நல்ல மழை பெய்தும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.