கடலூா் மாவட்டம் முழுவதும் காற்றுடன் மழை:ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் கவலை
கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பலத்த காற்றுடன் மழை
கன்னியாகுமரி முதல் மராட்டியம் வரை தரையில் இருந்து மேலடுக்கு வரை 2 காற்றும் ஒன்றாக சேர்ந்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் பகலில் கடலூரில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு மழை ஓய்ந்திருந்த நிலையில், இரவில் 10 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், தாழ்வான பகுதிகளில் தேங்கியது.
வடிய வைப்பதில் சிரமம்
இதேபோல் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது. இந்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைத்திருந்த அனைத்து நெல் மூட்டைகளும், நெல் குவியல்களும் நனைந்து சேதமானது. மேலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்திருந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள், கொள்முதல் நிலையத்தின் அருகிலேயே அடுக்கி வைத்திருந்தனர். திடீரென பெய்த மழையால் அந்த மூட்டைகளும் நனைந்து வீணானது. நெல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த பகுதி தாழ்வான இடங்கள் என்பதால், அதில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர்.
300 டன் நெல்
இதில் கோ.மங்கலம், மாத்தூர், கிளிமங்கலம், இளங்கியனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றில் மாத்தூர் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 300 டன் நெல் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மழையில் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்திருப்பதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெலாந்துறையில் 87.6 மி.மீ. மழை
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலால் அவதியடைந்த மக்கள், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 87.6 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக வானமாதேவியில் 5 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பிற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அண்ணாமலைநகர்..............84
தொழுதூர்..................................77
வேப்பூர்.......................................72
கீழ்செருவாய்............................64
லால்பேட்டை.........................52
கடலூர்.......................................40
ஸ்ரீமுஷ்ணம்...............................39
காட்டுமன்னார்கோவில்....35
சேத்தியாத்தோப்பு.................27
லக்கூர்......................................20.2
சிதம்பரம்.................................19.5
விருத்தாசலம்............................17
கொத்தவாச்சேரி.....................15
வடக்குத்து...............................14.1
குறிஞ்சிப்பாடி..........................14
புவனகிரி.....................................14
பரங்கிப்பேட்டை....................14
குப்பநத்தம்..............................12.4
மே.மாத்தூர்................................9
பண்ருட்டி.................................. 7