கொங்கணசித்தர் கோவிலில் சிலைகள் சேதம்
வெண்ணந்தூர் அருகே கொங்கணசித்தர் கோவிலில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வெண்ணந்தூர்
கொங்கணசித்தர் கோவில்
வெண்ணந்தூர் அருகே அத்தனூர் அடுத்த வன விரிவாக்கம் மையம் சாலை ஓரத்தில் கொங்கணசித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்வராஜ் (வயது 60) என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இவர் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல் பூசாரி செல்வராஜ், கோவிலுக்கு சென்று உள்ளார். அப்போது கோவிலில் இருந்த சித்தர் சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிலைகள் சேதம்
மேலும் கொங்கணசித்தர் கோவிலில் கருவறை சுற்றி இருந்த பாம்பாட்டி சித்தர், போகர் மற்றும் அகத்தியர் ஆகியோரின் 3 சிலைகளை சேதப்படுத்தி, அவற்றை கோவிலுக்கு வெளியே வனப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது. மேலும் கோவில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் நிர்வாகிகள் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வெண்ணந்தூர் அருகே கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.