மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை
நெல்லுக்கு நல்ல விலை கிடைத்தும் இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
நெல்லுக்கு நல்ல விலை கிடைத்தும் இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொய்த்துப்போன பருவமழை
ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்துதான் இந்த மாவட்டத்தில் நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்குட்பட்ட சோழந்தூர், வடவயல், திருப்பாலைக்குடி, பத்தனேந்தல், கழனிகுடி, காவனூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் சோழந்தூர் பிர்க்காவுக்கு உட்பட்ட ஏராளமான கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகின.
பல கிராமங்களிலும் விளைச்சலே இல்லாமல் பயிர்களில் சாவியாகவே இருந்து வருகின்றன. அதை தற்போது அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி பல கிராமங்களில் நடைபெற்று வருகின்றது.
பயிர்கள் பாதிப்பு
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழை சீசனில் மழையே பெய்யாததால் சோழந்தூர், வடவயல், கழனிக்குடி, உப்பூர், பத்தநேந்தல், திருப்பாலைக்குடி உள்ளிட்ட 100-க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டன. பல கிராமங்களில் நெற்பயிர்கள் விளைச்சல் இல்லாமல் சாவி ஆகவே உள்ளன.
தற்போது பயிர்களில் சாவியாக உள்ள நெற்பயிர்களை அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. சோழந்தூர் வடவயல் பத்தநேந்தல், கழனிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் கதிரடிக்கும் தளம் இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட நெற் பயிர்களை பாதுகாப்பாக கொட்டி காயவைக்க கூட தளம் இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
விலை உயர்வு
இந்த ஆண்டு ஆர்.என்.ஆர். ரகம் நெல் 60 கிலோ மூடை ரூ.1400-க்கு விலை போகின்றது.
கடந்தாண்டு இதே ரகம் ரூ.1100-க்கு தான் விலை போனது. அதுபோல் எல்.என்.ஆர். ரகம் நெல் 60 கிலோ மூடை ரூ.1100-க்கு விலை போகின்றது.
இதே நெல் கடந்த ஆண்டு ரூ.900-த்திற்கு விலை போனது. இந்த ஆண்டு நெல் விளைச்சல் குறைவு என்பதால் விலை சற்று உயர்ந்துள்ளது. ஆனால் ஏராளமான கிராமங்களில் நெற்பயிர்கள் விளைச்சல் இல்லாமல் முழுமையாக கருகி விட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை அரசு விரைந்து வழங்க வேண்டும். சோழந்தூர் பிர்காவுக்கு உட்பட்ட பல கிராமங்களிலும் கதிரடிக்கும் தளங்கள் அமைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.