சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செல்லும் சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செல்லும் சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வேலை வாய்ப்பு அலுவலகம்
திருவாரூர் விளமல் மன்னார்குடி சாலையில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் அருகில் உள்ள பிரிவு சாலையில் வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட மருந்து கிடங்கு மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன. இந்த வழியாக தான் ஆர்.வி.எல். நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டும். இதனால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் என நாள்தோறும் ஏராளமானோர் இந்த சாலை வழியாக வந்து செல்கிறார்கள்.
டாஸ்மாக் கிடங்கு
குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு படித்த மாணவ- மாணவிகள் தங்களது கல்வி தகுதியை பதிவு செய்வதற்கும், பதிவு மூப்பு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி போன்ற பல பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து செல்கின்றனர். இத்தகைய பிரதான சாலையில் டாஸ்மாக் அலுவலகத்துடன் கிடங்கு அமைந்துள்ளது. இதனால் தினசரி ஏராளமான லாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள மது ஆலைகளில் இருந்து மது பாட்டிகளை ஏற்றிக் கொண்டு திருவாரூர் டாஸ்மாக் கிடங்கிற்கு வந்து செல்கிறது.
சீரமைக்க கோரிக்கை
இந்த சாலை செம்மண் கப்பி சாலையாக இருந்து வரும் நிலையில் அதிக கனரக வாகன போக்குவரத்து காரணமாக இந்த சாலை மிகவும் பழுதடைந்து மிக பெரிய பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் இந்த சாலை, சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதுடன், மிகப்பெரிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசச்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.மேலும் நடந்து செல்பவர்களும் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
போராட்டம்
இதுகுறித்து சி.ஜ.டி.யூ தொழிற் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் கூறியதாவது:-
திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகம், மருந்து கிடங்கு மற்றும் டாஸ்மாக் அலுவலகம் செல்லும் சாலை என்பது மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இல்லாமலும், ஊராட்சியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சாலையாகவும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் இதுவரை சாலை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.தற்போது இந்த சாலை பொது வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் ஊராட்சி மூலம் இந்த சாலை சீரமைப்பு செய்யப்படும். தவறும்பட்சத்தில் இந்த சாலையை மாவட்ட நிர்வாகம் நேரடி பொறுப்பில் எடுத்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.