ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை மதகு சீரமைப்பு
ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை மதகு சீரமைக்கப்பட்டது.
ஊத்தங்கரை:
பாம்பாறு அணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பாம்பாறு அணை. இந்த அணையின் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த வாரம் அணையின் 4-ம் மதகின் கதவில் ஏற்பட்ட பழுது காரணமாக இரும்பு கயிறு அறுந்து கதவு திறந்தது.
இதனால் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறியது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாம்பாறு அணையை நேரில் ஆய்வு செய்து உடனடியாக மதகின் கதவை சீரமைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அணையின் கதவில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது.
உபரிநீர் வருகை
தற்போது பாம்பாறு அணைக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் அணை உபரி நீர், ஜவ்வாது மலை மற்றும் பெனுகொண்டாபுரம் ஏரி உபரி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் 4 முதல் 7 நாட்களுக்குள் பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாம்பாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.