'தினத்தந்தி' செய்தி எதிரொலி; நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தங்கும் விடுதி திறப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்களுக்காக கட்டப்பட்ட விடுதி நேற்று திறக்கப்பட்டது.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்களுக்காக கட்டப்பட்ட விடுதி நேற்று திறக்கப்பட்டது.
நோயாளிகள் உறவினர் விடுதி
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். இதில் உள்நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெறுவோருக்கு உதவியாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
இங்கு நோயாளிகளின் உறவினர்கள் இரவு நேரத்தில் ஓய்வு எடுப்பதற்காக ஆங்காங்கே உள்ள திண்ணைகள், மரத்தடிகளில் படுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்காக குழந்தைகள் வார்டு அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு விடுதி ஒன்று கட்டப்பட்டது. ஆனால் அதனை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
'தினத்தந்தி'யில் செய்தி
மேலும் அவசர சிகிச்சை பிரிவுக்கு பின்புறம் ரூ.50 லட்சம் செலவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தங்கும் விடுதி கட்டப்பட்டது. அதனை கடந்த 2-ந் தேதி உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். ஆனால் திறக்கப்பட்ட இந்த விடுதியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் மூடியே கிடந்தது.
இதுகுறித்து 'தினத்தந்தி'யில் நேற்று படத்துடன், செய்தி பிரசுரமானது. மேலும் மாநகராட்சி சார்பில் அந்த கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டிருப்பதும், தங்களிடம் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கவில்லை என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உடனடியாக திறப்பு
இந்த நிலையில் நேற்று காலை இதை அறிந்த மேயர் பி.எம்.சரவணன் உடனடியாக ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு நோயாளிகளின் உறவினர்களுக்காக கட்டப்பட்ட விடுதியை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று அந்த விடுதி கட்டிடம் திறக்கப்பட்டது. முதல் நாள் என்பதால் ஒருசிலர் விடுதியை பயன்படுத்த தொடங்கினார்கள்.
மேலும் உண்மையான நோயாளியின் உறவினரா? என்பதை தெரிந்து கொண்டு அவர்களை விடுதிக்குள் அனுமதிக்கும் வகையில், பாதுகாவலர் நியமிக்கப்பட்டு வருபவர்களின் ஆதார் எண் கேட்டு பதிவேடு பராமரிக்கப்படும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.