தினத்தந்தி செய்தி எதிரொலி: காப்புக்காட்டில் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினர் நடவடிக்கை
காப்புக்காட்டில் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாபுரம் கிராமம் அருகே அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் உரிய அனுமதி இல்லாமல் மண், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகள் மூலம் கடத்தி வந்தனர்.
இதுகுறித்து நமது நாளிதழில் கடந்த 26-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று திருத்தணி தாசில்தார் வெண்ணிலா கிராவல் மண் திருடப்பட்ட காப்புக் காட்டு பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அந்த இடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த் துறையினரால் பட்டா வழங்கப்பட்டு இதுவரை மக்கள் குடியேற்றம் இல்லாத பகுதியாக இருந்து தெரியந்தது.
எனவே தாசில்தார் வெண்ணிலா கிராவல் மணல் திருட்டை தடுக்க காப்புக்காடுக்கு செல்லும் வழியில் வாகனங்கள் செல்லாதவாறு பள்ளம் ஏற்படுத்துமாறு வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கார்த்திகேயபுரம், பெரிய கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர்கள் உமா மகேஸ்வரி, கண்ணகி ஆகியோர் கார்த்திகாபுரம் காப்பு காட்டில் 6 இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பள்ளங்கள் தோண்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.