'ரபேல் வாட்ச்' விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறதே, முடிவு என்னவாகும்?- பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
கேள்வி: ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் பலனளிக்குமா? மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் என்ன பண்ண போகிறார்? (வேணு புருஷோத்தமன், திருவள்ளூர்).
கேள்வி: காங்கிரசுடன் 'கை' கோர்க்க கமல்ஹாசன் ரெடியாகி விட்டாரே? (திலகர் ஈஸ்வரன், சேலம்)
பதில்: ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் அவரோடு டெல்லியில் நடந்து சென்று இருப்பதில் இருந்தே கமல் என்ன பண்ணப்போகிறார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்குமே!
கேள்வி: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விட்டாரே? இது சரியா? (பெ.திருமலை, திருச்சி-1)
பதில்: அதில் என்ன தவறு?. அரசியல் அனுபவம் இருக்கிறது. எம்.எல்.ஏ. பதவியில் இருக்கிறார். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுகிறார். இது போதாதா?. உங்களுக்கு ஏன் வீண் எரிச்சல்? இந்தப் பயணத்தில் சேர்ந்து நடந்ததன் மூலம் கையை நீட்டிவிட்டாரே....
கேள்வி: தமிழுக்கும்-இந்திக்கும் உள்ள தொடர்பை யாரும் பிரிக்க முடியாது என்று சென்னையில் நடந்த பா.ஜ.க. கருத்தரங்கில் இளைஞர் அணித்தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறியிருக்கிறாரே? (இ.முத்து, சேரன்மகாதேவி)
பதில்: இந்தியை திணிக்க இப்படி போகிற போக்கில் சொல்லப்படும் பேச்சு இது. இதை தமிழர்கள் நம்பமாட்டார்கள்.
கேள்வி: அ.திமு.க.வில் இப்போது தலைமைப் பொறுப்பில் யாரும் இல்லையே? கட்சி எப்படி நடக்கிறது? (ஆர்.ராமானுஜம், கும்பகோணம்)
பதில்: வெளிநாடுகளில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் ஓடுகிறதே! கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. அதுபோலத்தான் இதுவும்.
கேள்வி: சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத கட்சிகள் எல்லாம் 'வரப்போகிற தேர்தலில் ஆட்சி அமைப்போம்' என்று முழங்குகிறார்களே? (பி. சம்பத், வேலூர்)
பதில்: "கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்" என்ற பழைய பாட்டை கேட்டு இருக்கிறீர்களா?
கேள்வி: தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக்குவதே எனது குறிக்கோள் என தென்காசியில் நடந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறியிருக்கிறாரே? (ஆர். ராதாகிருஷ்ணன், தென்காசி)
பதில்: தமிழ்நாட்டுக்கு வரும் தொழில் முதலீடுகளையும், அடையும் வளர்ச்சிகளையும் பார்த்தால், அந்த நாள் தூரத்தில் இல்லை என்றுதான் தெரிகிறது.
கேள்வி: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் கைக்கடிகாரம் பெரிய சர்ச்சையை அரசியலில் கிளப்பியிருக் கிறதே? (கே.சார்லஸ், நாகர்கோவில்)
கேள்வி: 'ரபேல் வாட்ச்' விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறதே, முடிவு என்னவாகும்?) ஆர்.நாகராஜன், நாகப்பட்டினம்).
பதில்: கருத்துகளை வைத்து அரசியல் செய்யலாமே தவிர, கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.
டீக்கடையில் எப்போது 'ரபேல் வாட்ச்' விவகாரம் பற்றி பேசுகிறார்களோ அன்று வாட்ச்சின் பில்லை வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொன்னதில் இருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும்.
கேள்வி: எந்த ஊரைப் பார்த்தாலும், வடநாட்டினர் தான் எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறார்களே? (பி.எர்னஸ்ட், தூத்துக்குடி)
பதில்: தமிழக இளைஞர்கள் தூக்கத்தில் இருந்து விழிக்கவேண்டும். வேலை இருக்கிறது. ஆனால் வேலை பார்க்க அவர்கள் வருவதில்லை. வடமாநில இளைஞர்கள் நுழைந்து விடுகிறார்கள்.
கேள்வி: என் கணவர் கோபத்தில் அடிக்கடி என்னை அடிக்கிறார். அவரை எப்படி திருத்துவது? (வே.மகாலட்சுமி, ராஜபாளையம்)
பதில்: 'அடிக்கிற கைதான் அணைக்கும்'. அது உங்களிடம்தான் இருக்கிறது. காதல் பார்வையை வீசுங்கள். மடியில் படுத்துவிடுவார்.
கேள்வி: கறுப்பு பணம்... கறுப்பு பணம்... என்கிறார்களே? அது எப்படி இருக்கும்? (ஆர்.பவானி, தஞ்சை)
பதில்: கறுப்பு பணம் என்றால் கைபட்டு, கசங்கி கறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? சகோதரி. அது புதுமெருக்கழியாத புது நோட்டுகளாக ஆங்காங்கு ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும்.
கேள்வி: எங்கள் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை எப்படி என்மீது காதல் கொள்ள வைப்பது? கடிதம் கொடுக்கட்டுமா? (எம்.பாலச்சந்திரன், ஈரோடு)
பதில்: 5ஜி தொழில்நுட்ப காலத்தில் இருந்து கொண்டு கடிதம் கொடுக்க நினைப்பது சரியா?.
கேள்வி: என் காதலி எனக்கு ரொமாண்டிக்காக பேசத் தெரியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறாள்? எப்படி அவள் விரும்புவதுபோல பேசுவது? ஏதாவது புத்தகம் இருக்கிறதா சொல்லுங்கள்? (கே.பழனிவேலு, பெங்களூரு)
பதில்: சொல்லித்தர வேண்டியது அல்ல மன்மதக்கலை. உங்கள் உள்ளத்தில் 'ரொமான்ஸ்' இருந்தால் வார்த்தையில் காதல் சொட்டும். உங்கள் உள்ளம்தான் வறண்டு கிடக்கிறது போலும்.
கேள்வி: எனக்கு இப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. என் மனைவி கவர்ச்சியாக உடை அணியமாட்டேன் என்கிறாளே? (தா.சந்திரசேகரன், அரக்கோணம்)
பதில்: தன்னிடம் இயற்கையாக உள்ள கவர்ச்சியே போதும், உங்களை சுண்டி இழுக்க என்று நினைக்கிறார் போலும்.
கேள்வி: நான் கல்லூரியில் படிக்கும் பெண். பஸ்சில் வரும்போது ஒருவன் இடித்துக்கொண்டே இருக்கிறான். என்ன செய்வது? (எஸ்.புவனேசுவரி, சென்னை)
பதில்: கையில் குண்டூசி வைத்துக்கொள்ளுங்கள். 'இடி ராஜா' உடலில் அது புகுந்து விளையாடட்டும். ஓடிவிடுவான்.