தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் சிதம்பரம் நகர் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிமெண்டு சிலாப்பை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுப்பார்களா?
தாழக்குடியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கத்தொட்டியின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சிதம்பரதாணு, தாழக்குடி.
நடவடிக்கை தேவை
குளச்சல் இரும்பிலி சந்திப்பு பகுதியில் அரசு மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு மது குடிக்க வரும் மது பிரியர்கள் இரவு நேரம் போதையில் அருகில் உள்ள சாலையின் நடுவே நின்று தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மதுபோதையில் சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-சுஜின், ஆலஞ்சி.
தூர்வார வேண்டும்
வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட கழுவன்தட்டுவிளையில் தானாங்குளம் உள்ளது. இந்த குளத்து நீரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஊர் மக்கள் பயன்படுத்துவதுடன், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது குளம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமேஸ்வரன், கழுவன்தட்டுவிளை.
சேதமடைந்த அலங்கார தரைக்கற்கள்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மாளிகையின் அருகில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரைக்கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் சேதமடைந்த அலங்கார தரைக்கற்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-முகம்மது சபீர், குளச்சல்.
சாலையை சீரமைக்க வேண்டும்
கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணனூர் முதல் முளகுமூடு வரை செல்லும் சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜீஸ், கண்ணனூர்.
சுகாதார சீர்கேடு
திற்பரப்பு சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டூர்கோணம் பகுதியில் மிகவும் பழமையான பஞ்சாயத்து கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகில் நிற்கும் மரங்களில் இருந்து உதிரும் இலைகள் கிணற்றின் உள்ளே விழுகிறது. இதனால், கிணற்றின் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வின், கோட்டூர்கோணம்.
பராமரிப்பு இல்லாத பூங்கா
திற்பரப்பு அருவி பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் சிறுவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த விளையாட்டு உபகரணங்களில் பல உடைந்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக சிறுவர்கள் ஏறி அமர்ந்து விளையாடும் ஸ்பிரிங் வாத்துகள் உடைந்துள்ளது. இதில் தரையில் ஸ்பிரிங்க் இணைக்கப்பட்ட பகுதி மட்டும் அப்படியே உள்ளது. சிறுவர் பூங்காவில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் இந்த ஸ்பிரிங்க் திட்டில் கால் இடறி தரையில் விழுவதும், காலில் காயம் ஏற்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. எனவே சிறுவர்களுக்கு ஆபத்தை விளைக்கும் ஸ்பிரிங்க் திட்டுக்களை உடனே அகற்றி, பூங்காவை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோமதி நாயகம், மார்த்தாண்டம்.