தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கோயம்புத்தூர்

சுகாதார சீர்கேடு

கோைவ மாநகராட்சி 61-வது வார்டு கள்ளிமடை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக காமாட்சி அம்மன் கோவில் பகுதி, காமராஜர் நகர் பகுதி ஆகிய இடங்களில் சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாய்களை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மாசிலா மீனாட்சி சுந்தரம், கள்ளிமடை.

குடிநீர் வசதி இல்லை

பல்லடம்-பொள்ளாச்சி மெயின்ரோடில் மிகப்பெரிய ஊராக சுல்தான்பேட்டை உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு உள்பட பல ஊர்களுக்கு சென்று திரும்புகின்றனர். பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லை. வெகுநேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தண்ணீர் தாகத்தால் அவதி அடைகின்றனர். எனவே அந்த பஸ் நிறுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், சுல்தான்பேட்டை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை கீரணத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த ஊராட்சி அலுவலகம் அருகில், கிராம நிர்வாக அலுவலகம் எதிரே, தொழில்நுட்ப பூங்கா ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்த குப்பைகள் சரிவர அகற்றப்படுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், கீரணத்தம்.

பொதுமக்கள் அச்சம்

சூலூர் செம்மாண்டம்பாளையம் அருகே கோதபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சட்டவிரோதமாக கள் மற்றும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மதுபிரியர்கள் வாங்கி குடித்து விட்டு போதையில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் குடிபோதையில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மதுபிரியர்கள் நடந்து கொள்கிறார்கள். ஒருசிலர் அந்த வழியாக நடந்து வரும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சூலூர்.

கால்வாயை சீரமைக்கலாமே...

சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் பல இடங்கள் சிதிலமடைந்து உள்ளன. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்போது, தண்ணீர் வீணாவதுடன், கடைமடை விவசாயிகளுக்கு பாசன தண்ணீர் முழுமையாக கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்காலில் சிதிலமடைந்த பகுதிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும்.

சக்தி முருகன், சுல்தான்பேட்டை.

விபத்து அபாயம்

ஆனைமலை பகுதியில் தென்னை விவசாயம் பிராதனமாக உள்ளது. இதையொட்டி ஆனைமலை சுற்றியுள்ள தென்னை நார் தொழிற்சாலைக்கு லாரிகளில் தென்னை மட்டை ஏற்றி செல்கின்றனர். அந்த லாரிகளில் தார்பாய் கட்ட வேண்டும். ஆனால் ஒருசில லாரிகளை தவிர பெரும்பாலான லாரிகளில் தார்பாய் கட்டுவதில்லை. இது அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் காற்றில் பறக்கும் தென்னை மஞ்சி மற்றும் மட்டைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், ஆனைமலை.

நோய் பரவும் அபாயம்

ஆனைமலை-வேட்டைகாரன்புதூர் செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள வடிகால் பள்ளமாக இருக்கிறது. இதில் மழைநீர் மாத கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது தவிர அருகில் உள்ள தோட்டத்தில் வெட்டபட்ட மரங்களை வடிகாலில் குவியலாக போட்டு வைத்துள்ளனர். இதனால் அதிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து, மழைநீர் தேங்காதவாறு வடிகாலை சீரமைத்து தர வேண்டும்.

மதன், வேட்டைகாரன்புதூர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

கோவை விசுவாசபுரம் 4-வது வீதி அன்னை நகரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் பலத்த மழை பெய்யும்போது, அந்த சாலையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களும், நீண்ட நாட்களாக மழைநீர் வடியாமல் கிடப்பதால், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே இ்ந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மோகன்ராஜ், விசுவாசபுரம்.


Next Story