தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுல்தான் தெருவில் ஆண்டிக்குளம் ரோட்டில் இருந்து கும்மங்குளம் சாலை வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி பல்வேறு காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

ராஜேந்திரன், ஆலங்குடி.

குரங்குகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை ஊராட்சி பகுதிகளில் தினந்தோறும் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து வாழை, மாமரம், தென்னை மரங்களில் ஏறி இலைகளை கடித்து சேதப்படுத்துகிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவுகளை எடுத்து சென்று விடுகிறது. சில நேரங்களில் முதியவர்கள், குழந்தைகளை கடிக்கிறது. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மருதுபாண்டியர் நகர்.

குண்டும் குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சி வடக்குப்பட்டி மாதா கோவில் ஆர்ச்சில் இருந்து கூத்தம்பட்டி சிவபுரம் இணைப்பு சாலை வரையிலான சாலை மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாக பல்வேறு தரப்பிலான மக்கள் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் குழிகளில் தங்கள் வாகனங்களை விட்டு நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்கள், வடக்குப்பட்டி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் வடகாடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலங்குடி.

மண்சாலையால் விபத்து அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள அழியாநிலை மின்நிலையத்திற்கு அருகில் உள்ள மண்சாலையில் பெரும்பாலான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் மண்சாலையில் உள்ள மண் முழுவதும் தார்சாலையில் பரவி வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அழியாநிலை.


Next Story