தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்


மரக்கிளைகளை வெட்டி அகற்றலாமே!

நாமகிரிப்பேட்டை நகர நெடுஞ்சாலையில் போலீஸ் நிலையம் முன்புறம் பழமைவாய்ந்த புங்கமரம் உள்ளது. இதன் அருகில் பல்வேறு மரங்களும் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளில் உரசுகின்றன. இதனால் அந்த வழியாக அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளில் மரக்கிளைகள் மற்றும் மின்கம்பிகள் உரசுகின்றன. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

-ராஜா, நாமகிரிப்பேட்டை, நாமக்கல்.

டாஸ்மாக்கடை அகற்றப்படுமா?

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டை வடக்கு தெரு கொட்டாவூரின் நடுவே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் விவசாய நிலம் அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுபொருட்களால் மாசடைகிறது. மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு ஊருக்குள் வாகனங்களை வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே உள்ளனர். இதுபற்றி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஊரின் நடுவே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

-அரவிந்த், நல்லம்பள்ளி, தர்மபுரி.

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி காட்டூர் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலந்துவிடுகிறது. இதனால் ஏரியின் நீர் வீணாவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி முழுவதும் சுகாதார கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலக்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தியாகராஜன், காட்டூர், சேலம்.

ஆபத்தான பள்ளம்

சேலம் கோரிமேடு ஏ.டி.சி. நகர் சாலை வளைவில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையையொட்டி உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

-அந்தோனிதாஸ், ஏ.டி.சி. நகர், சேலம்.

வேகத்தடை அமைக்க கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் பாரதிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன். இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த இடத்தில் சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

-கதிர், தர்மபுரி.

சாலை புதுப்பிக்கப்படுமா?

சேலம் மாநகராட்சி 22-வது வார்டு சிவதாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி, அண்ணாநகர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.

-அமுல்தாஸ், ஆண்டிப்பட்டி, சேலம்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த கொப்பம்புதுர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவரும் சாக்கடை கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ்குமார், கொப்பம்புதுர், சேலம்.

மாற்றி அமைக்க வேண்டிய மின்கம்பம்

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சிங்கிரிப்பட்டியில் இந்திராநகர் காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி காட்சி அளிக்கிறது. அதிக காற்று அடித்தாலும் எந்தநேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடம் உள்ளது. இதுபற்றி பலமுறை மின்வாரிய அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.


Next Story