தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருநெல்வேலி

திறந்து கிடக்கும் மின்பெட்டி

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பிரதான சந்திப்பு பகுதியில் பிள்ளையார் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்பெட்டியை புதுப்பித்து பூட்டி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-குருசாமி, வி.எம்.சத்திரம்.

தெருவிளக்கு தேவை

நெல்லையை அடுத்த பழைய பேட்டை காந்திநகர் 50 அடி சாலையில் போதிய தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே அங்கு போதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கண்ணன், நெல்லை.

சுகாதாரக்ேகடு

அம்பை- பாபநாசம் மெயின் ரோட்டில் கல்சுண்டு காலனி அருகில் சாலையோரம் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-முத்து, அம்பை.

ஏ.டி.எம். மையம் வேண்டும்

நெல்லை அருகே சிவந்திபட்டியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவசர தேவைக்கு பாளையங்கோட்டை தியாகராஜநகர், செய்துங்கநல்லூரில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க செல்கின்றனர். எனவே சிவந்திபட்டியில் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகேஷ், சிவந்திபட்டி.

குண்டும் குழியுமான சாலை

திசையன்விளை அப்புவிளை காமராஜ் நகர் 1-வது தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-இம்மானுவேல், அப்புவிளை.

ஆபத்தான பயணம்

தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு செல்லும் பஸ்சில் காலை, மாலையில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயணிக்கின்றனர். இதனால் கூட்டம் அலைமோதுவதால் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் நின்று பயணிக்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-செல்வம், ஆய்க்குடி.

* செங்கோட்டையில் இருந்து சுரண்டை, கடையநல்லூர், தெற்குமேடு, கற்குடி, தென்காசி செல்லும் பஸ்களில் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். எனவே அனைத்து வழித்தடங்களிலும் தானியங்கி கதவு பொருத்தப்பட்ட பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

காட்சிப்பொருளான பொதுசேவை மையம்

கடையம் யூனியன் அஞ்சான்கட்டளை பஞ்சாயத்து கட்டளையூரில் பொதுசேவை மையம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆலங்குளத்துக்கு சென்று வருகின்றனர். எனவே காட்சிப்பொருளான பொதுசேவை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-மாரிமுத்து, சொக்கநாதன்பட்டி.

நூலகம் திறக்கப்படுமா?

தென்காசி யூனியன் மத்தளம்பாறை பஞ்சாயத்தில் அரசு நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே நூலகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-சிவலிங்கம், மத்தளம்பாறை.

தெரு நாய்கள் தொல்லை

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் மெயின் ரோட்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

வழித்தடம் மாறும் பஸ்கள்

தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், குலசேகரபட்டி வழியாக பாவூர்சத்திரத்துக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் (வழித்தட எண்: 24ஏ, 24சி) அடிக்கடி மேலப்பாவூருடன் நின்று விடுகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்களை உரிய வழித்தடத்தில் முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-இசக்கிதுரை, குலசேகரபட்டி.


Next Story