தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 5:15 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்இணைப்பு பெட்டி

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் சந்திப்பு பகுதியில் விநாயர் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி சேதமடைந்து திறந்த நிலையிலே உள்ளது. இதன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே மின்விபத்து ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் உள்ள ஆபத்தான மின்இணைப்பு பெட்டிக்கு மூடி அமைக்குமாறு வேண்டுகிறேன்.

-குருசாமி, வி.எம்.சத்திரம்.

வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

ராதாபுரம் தாலுகா மேல விஜயாபதி விலக்கில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடையில் வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

* ஆற்றங்கரைபள்ளிவாசலில் இருந்து நவ்வலடி வழியாக திசையன்விளைக்கு செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டுகிறேன்.

-அந்தோணிபிச்சை, தோப்புவிளை.

படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்

நெல்லை சந்திப்பு- கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் இடையே காலை, மாலையில் போதிய அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ்களில் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-முத்தையா, கிருஷ்ணாபுரம்.

பொதுக்கிணறு தூர்வாரப்படுமா?

பாளையங்கோட்டை யூனியன் செங்குளம் பஞ்சாயத்து கீழ ஓமநல்லூர் ரேஷன் கடை அருகில் ஊர் பொதுக்கிணறு உள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாடற்ற இந்த கிணற்றில் குப்பைக்கூளமாக உள்ளது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பயன்பாடற்ற ஊர் பொதுக்கிணற்றை தூர்வாரி மீண்டும் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-தேவராஜ், கீழ ஓமநல்லூர்.

தெருவிளக்கு தேவை

பாளையங்கோட்டை வெற்றிதிருநகர் தனியார் பள்ளிக்கூடத்தின் கீழ்புறம் உள்ள தெருவில் 2 மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-சந்திரசேகரன், பாளையங்கோட்டை.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால், அங்குள்ள ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதாக முத்து விநாயகம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு குப்பைகள் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரில் காந்தாரி அம்மன் கோவில் நுழைவுவாயில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வீணாக சென்று வாறுகாலில் கலக்கிறது. இதனால் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

குண்டும் குழியுமான சாலை

கோவில்பட்டி தாலுகா கரிசல்குளம் கிராமத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தெருக்களில் குழி தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் பதித்த பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-ராஜா, கரிசல்குளம்.

தெருநாய்கள் தொல்லை

எட்டயபுரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சாமி, எட்டயபுரம்.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

தூத்துக்குடி சில்வர்புரம் கிழக்கு தெரு, மேற்கு தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் சீமை கருவேல மரங்கள், முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ராஜா, தூத்துக்குடி.

ஒளிராத தெருவிளக்கு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து பெரியகுளம், பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-கணேசன், கீழக்கலங்கல்.

குண்டும் குழியுமான சாலை

கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இந்த சாலையின் ஒருபுறம் வயலும், மற்றொருபுறம் குளமும் உள்ளதால் குறுகலாக உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், சாலையோரம் தடுப்புச்சுவர் அமைத்து விரிவாக்கம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

* கடையம் அருகே திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து ரவணசமுத்திரம் ஊருக்கு செல்லும் சாலை, பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆற்றோரத்தை ஒட்டிய ரவணசமுத்திரம் செல்லும் சாலை, ரவணசமுத்திரம் வாகைகுளம் விலக்கில் இருந்து வீராசமுத்திரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க கேட்டு கொள்கிறேன்.

-ராமசுப்பிரமணியன், கூனியூர்.

காற்றில் சரிந்த ஊர் பெயர்பலகை

கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பெரியசாமிபுரம் எல்லையில் சமீபத்தில் ஊர் பெயர்பலகை புதிதாக அமைக்கப்பட்டது. தற்போது பலத்த காற்று வீசியதில் பெயர்பலகை முறிந்து தொங்கியவாறு வெறும் கம்பி மட்டுமே நிற்கிறது. எனவே காற்றில் சரிந்த பெயர்பலகையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மதுசூதனன், பெரியசாமிபுரம்.

குடிநீர் தட்டுப்பாடு

கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து கட்டேறிபட்டி கிராமத்தில் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சிறிதுநேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கப் பெறாமல் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-துரை, கட்டேறிபட்டி.

பயணிகள் நிழற்குடை தேவை

கடையநல்லூர் தாலுகா இடைகால் கிராமத்தில் சங்கரன்கோவில் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்லும் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-அபுல் ஹசன், இடைகால்.


Next Story