தினசரி அதிகாலை ரெயில் இயக்க வேண்டும்
காரைக்கால் - திருச்சி இடையே தினசரி அதிகாலை ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில் உபயோகிப்போர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர்- நாகப்பட்டினம் ரெயில் உபயோகிப்போர் நல சங்க தலைவர் மோகன், செயலாளர் நாகூர் சித்திக் ஆகியோர் தென்னக ரெயில்வேக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
பேரளம் - திருநள்ளாறு - காரைக்கால் ரெயில்பாதை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
நாகை- தஞ்சை, மயிலாடுதுறை- விழுப்புரம் பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும். வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரெயிலை காரைக்குடி வழியாக வாரம் 2 நாட்கள் நிரந்தரமாக இயக்க வேண்டும். வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரெயிலை மதுரை திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாருர் வழியாக இயக்க வேண்டும்.
பராமரிப்பு நிலையம்
காரைக்கால் - திருச்சி இடையே அதிகாலையும், திருச்சி- காரைக்கால் இடையே இரவு 7.45-க்கும் தினசரி ரெயில் இயக்க வேண்டும். காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் நீண்டதூர ரெயில் பெட்டிகளை பராமரிக்க பிட் லைன் பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
கிடப்பில் போடப்பட்டுள்ள நாகை - திருத்துறைப்பூண்டி ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதை தொடர்ந்து காரைக்கால் - அகஸ்தியம்பள்ளி இடையே நாகூர், நாகை, திருக்குவளை, எட்டுக்குடி, திருத்துறைப்பூண்டி, தோப்புத்துறை, வேதாரண்யம் வழியாக ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.