மதுரை ரெயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி


மதுரை ரெயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி
x

மதுரை ரெயில் பெட்டி தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மதுரை,

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி போடிலைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த பெட்டியில் இருந்த 5 ஆண்கள், 4 பெண்கள் என 9 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து ரெயில்வே போலீசார், அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி கூறியதாவது:-

"மதுரை ரெயில் தீ விபத்துக்கு சிலிண்டர் தான் பிரதான காரணம். வெடித்து சிதறிய சிலிண்டரை நாகர்கோவிலில் பயணிகள் மீண்டும் நிரப்பி உள்ளனர். கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதில் தீ பற்றியதால் சிலிண்டர் வெடித்துள்ளது. ரெயில் தீ விபத்து தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடக்கிறது

ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள ரெயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது" என்று கூறினார்.


Next Story