வங்கக்கடலில் "மாண்டஸ் புயல்" உருவாகிறது: புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என தகவல்


வங்கக்கடலில்  மாண்டஸ் புயல் உருவாகிறது: புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2022 9:17 AM GMT (Updated: 7 Dec 2022 10:58 AM GMT)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 770 கி.மீ தொலைவில் உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 770 கி.மீ தொலைவில் உள்ளது.

மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

புதிய புயலுக்கு மாண்டஸ் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இன்று மாலை புயல் சின்னமாக வலுவடைந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும்.

தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக சென்னையில் 9 மற்றும் 10ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 3 துறைமுகங்களில் 4, 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை துறைமுகத்தில் 4 மற்றும் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story