சென்னையை மிரட்டிய 'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்தது; 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை


சென்னையை மிரட்டிய மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது; 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
x

சென்னையை மிரட்டிய ‘மாண்டஸ்’ புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தது. இதில் 5 பேர் பலியானதோடு 400 மரங்கள் அடியோடு சாய்ந்தன. 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி விட்டது.

'மாண்டஸ்' புயல்

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும், அதனைத்தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த புயல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் கரையை கடக்க தொடங்கியது.

அந்த நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

கரையை கடந்தது

அதனைத்தொடர்ந்து புயலின் மையப்பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 வரையில் கரையை கடந்தது. அந்த நேரத்தில் மணிக்கு 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியது.

அப்போது சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. சுமார் 3 மணி நேரம் 'மாண்டஸ்' புயலின் மையப்பகுதி கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மையப்பகுதியை தொடர்ந்து, புயலின் வால்பகுதி கடந்தது.

புயல் கரையை கடந்தபோது, சென்னை மற்றும் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகள், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்தது. இதனால் கடற்கரை பகுதிகளில் கரையை தாண்டி கடல் அலை மேல் நோக்கி பாய்ந்தது. கடற்கரை பகுதிகளையொட்டிய மீனவ கிராமங்களின் குடியிருப்புகளுக்கும் கடல் நீர் புகுந்தது. இதனால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன.

சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டன. மேலும் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள், விளம்பர பேனர்கள் சரிந்து கீழே சாய்ந்தன. அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கையால், விழுந்து கிடந்த மரங்கள், மின் கம்பங்கள் உள்பட அனைத்தையும் உடனுக்குடன் அகற்றினர்.

தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

கரையை கடந்த புயல் அதன்பின்னர் வலுவிழக்க தொடங்கியது. முதலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி வடகடலோர பகுதிகளில் மையம் கொண்டிருந்தது.

இதனால் நேற்று மதியம் வரை சென்னை, புதுச்சேரியை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசியபடியே இருந்தது. அதனைத்தொடர்ந்து வட கடலோர மாவட்டங்களுக்கு அருகில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழந்து, மேற்கே தென்மேற்கே அரபிக்கடல் நோக்கி நகர்ந்து சென்றது.

12 மாவட்டங்களில் இன்று கனமழை

புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. புயல் கரையை கடந்த மாமல்லபுரத்தில் 13 செ.மீ. மழை பெய்தது. இது தவிர தமிழகத்தில் 26 இடங்களில் மிக கனமழையும், 35 இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது.

புயல் கரையை கடந்து தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருப்பதால், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

புயல் கரையை கடந்த நேரத்தில் மழை பெய்த இடங்கள்

மாண்டஸ் புயல் நேற்று அதிகாலையில் கரையை கடந்தது. அதன்படி, நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவுகள் வருமாறு:-

வெம்பாக்கம் 25 செ.மீ., மின்னல், பணப்பாக்கம் தலா 20 செ.மீ., காஞ்சீபுரம் 19 செ.மீ., செய்யார் 18 செ.மீ., ஆவடி 17 செ.மீ., திருத்தணி, காட்டுக்குப்பம் தலா 16 செ.மீ. அயனாவரம், குன்றத்தூர் தலா 15 செ.மீ., அரக்கோணம், உத்திரமேரூர், பெரம்பூர் தலா 14 செ.மீ., கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், சோழவரம், பள்ளிப்பட்டு, எம்.ஜி.ஆர்.நகர், ஆலந்தூர், ஊத்துக்கோட்டை தலா 13 செ.மீ., அம்பத்தூர், செங்குன்றம், செங்கல்பட்டு, கொரட்டூர், சென்னை விமான நிலையம் தலா 12 செ.மீ., திருவள்ளூர், பொன்னேரி, சென்னை நுங்கம்பாக்கம், பூந்தமல்லி, தண்டையார்ப்பேட்டை, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், காவேரிப்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி தலா 11 செ.மீ., மீனம்பாக்கம், திருத்தணி, புழல், பூந்தமல்லி, அண்ணா பல்கலைக்கழகம், தாமரைப்பாக்கம், சின்னக்கல்லாறு, ஏ.சி.எஸ். கல்லூரி தலா 10 செ.மீ., வாலாஜாபாத், திரூர், சோழிங்கநல்லூர், சென்னை கலெக்டர் அலுவலகம், திருவாலங்காடு, வந்தவாசி, மாதவரம் தலா 9 செ.மீ., ஜமுனாமரத்தூர், கொடைக்கானல், நந்தனம் தலா 8 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம், பள்ளிக்கரணை, சின்கோனா, ஊட்டி, ஆற்காடு, ஆர்.கே.பேட்டை தலா 7 செ.மீ. உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

பெரியஅளவில் பாதிப்பு இல்லை

தமிழக அரசு மேற்கொண்ட முன்எச்சரிக்கை நடவடிக்கையால் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரவுநேர பஸ் போக்குவரத்து பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களும் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே இருந்தனர்.

முதல்-அமைச்சர் பார்வையிட்டார்

சென்னையில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது பாதிப்புகளை கணக்கெடுத்து முடித்த பின்னர் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புயல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

பீகார் தொழிலாளர்கள்

புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளை பாக்கம் ஊராட்சியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர்கள் நிரஞ்சன்குமார் (வயது 22), சுகன்குமார் (24). பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பிள்ளைபாக்கம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். மாண்டஸ் புயல் காரணமாக மரம் முறிந்து விழுந்து அறுந்து கிடந்த மின்கம்பியை அவர்கள் இருவரும் மிதித்து விட்டனர்.

மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

இதில் நிரஞ்சன் குமார், சுகன்குமார் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 2 பேர் பலி

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் ராம் நகர் 7-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி (45). கட்டிடத்தொழிலாளி. கல்லூரியில் படிக்கும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இவருடன் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (25) என்பவர் வசித்து வந்தார். குடிசை வீட்டில் தங்கி இருந்தனர். மாண்டஸ் புயல் காற்று பலமாக வீசி மழை பெய்ததால் மகள்களை வீட்டில் விட்டு ராஜேந்திரனுடன் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கார் நிறுத்தும் இடத்திற்கு தங்குவதற்காக இருவரும் சென்றனர்.

அப்போது பலத்த காற்று காரணமாக சாலையில் மின்சார வயர் அறுந்து விழுந்து கிடந்தது. இது தெரியாமல் சாலையை கடக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி லட்சுமி, ராஜேந்திரன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

ஐ.டி. ஊழியர் பலி

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (33). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் கட்டிட பராமரிப்பு சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். மாண்டஸ் புயலால் பலமாக வீசிய காற்றால் கண்ணாடி கதவை அடைக்க முற்படும் போது எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கதவு அடித்ததில் கீழே விழுந்தார்.

உடனே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

50 ஆயிரம் வாழைகள் நாசம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்றுமுன்தினம் விடிய, விடிய சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.


Next Story