சூறாவளிக்காற்றுடன் கனமழை: பண்ருட்டி பகுதியில் முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்து சேதம் விவசாயிகள் கவலை
பண்ருட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதில் பண்ருட்டி பகுதியில் இரவு 8 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், சூறைக்காற்றும் வீசியது.
இதில் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி, ஏ.புதூர், சத்திரம், வேகாக்கொல்லை, பாவைகுளம், மருங்கூர், காட்டுக்கூடலூர், கொளஞ்சிக்குப்பம், அரசடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்த முந்திரி, பலா மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.
மகசூல் பாதிக்கும்
இந்த பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் உள்ள பலா, முந்திரி மரங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது. தற்போது முந்திரி மற்றும் பலா காய்கள் காய்த்தும், சில இடங்களில் பூக்கள் பூத்தும் இருந்தன. இதுபோன்ற சூழலில் சூறைக்காற்றுக்கு மரங்கள் முறிந்து சேதமாகி இருப்பது, மகசூல் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விவாசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் வேளாண் துறை அதிகாரிகள், சேதமான மரங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடு சேதம்
இதனிடையே காட்டு கூடலூரில் தைலம்மாள் என்கிற மூதாட்டியின் ஓட்டு வீடு மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமானது. அந்த நேரத்தில் தைலம்மாள் வீட்டில் இல்லாததால், அவர் உயிர் தப்பினார்.