நாமக்கல் மாவட்டத்தில்இணையதள மோசடியில் பறிபோன ரூ.16.57 லட்சம் மீட்புஉரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் இணையதள மோசடியில் பறிபோன ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இந்த பணத்தை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் இணையதள மோசடியில் பறிபோன ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இந்த பணத்தை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் வழங்கினார்.
ரூ.16.57 லட்சம் மீட்பு
நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் மூலம் ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி மற்றும் இணையதள திருமண மைய மோசடி சம்பந்தமாக பெறப்பட்ட புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 10 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் இழந்த பணத்தை கோர்ட்டு உத்தரவு மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் இணையவழி குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் இருந்து மீட்கப்பட்டது. அவ்வாறு மீட்கப்பட்ட ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்து 800-ஐ பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஏமாற கூடாது
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் தலைமை தாங்கி, பாதிக்கப்பட்ட நபர்களிடம் பணத்தை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பெயரில் பணம் கேட்டால் கொடுத்து ஏமாறகூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். எஸ்.எம்.எஸ். இ-மெயில் மூலம் லாட்டரி, பரிசு பொருட்கள், குறைந்த விலைக்கு பொருட்கள் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற கூடாது
உங்களது நண்பரது இ-மெயிலில் இருந்து அவர் வெளியூரில் இருப்பதாகவோ, அவர் உங்களை போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவோ கூறி உங்களை ஏதேனும் வங்கி கணக்கில் பணம் செலுத்த கோரும் இ-மெயில்களை நம்ப வேண்டாம். ஆன்லைனில் பகுதி நேரம் வேலை செய்வது மூலம் தினசரி ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்றவற்றில் வரும் செய்திகளை நம்பி ஏமாற கூடாது. தற்போது இந்த வகை மோசடி அதிகளவில் நடைபெறுகிறது.
கட்டணமில்லா தொலைபேசி
ஆன்லைனில் இலவசமாக வைரஸ் ஸ்கேன் செய்வதாகவோ அல்லது இலவச பயன்பாட்டு மென்பொருள் தருவதாகவோ வரும் விளம்பரங்களை க்ளிக் செய்யகூடாது. பரிசு தொகை கொடுப்பதாகவோ, அயல் நாட்டில் இருந்து பணப்பரிமாற்றம் செய்வதாகவோ சொல்லி உங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் கேட்டு வரும் இ-மெயில்களுக்கு பதில் அளிக்க கூடாது. போலி இணையதள திருமண மையங்களை நம்பி ஏமாற கூடாது. பணப்பரிவர்த்தனை ஓ.டி.பி. எண்ணை யாரிடமும் தெரிவிக்க கூடாது. தெரியாத எண்களில் இருந்து வரும் எந்த ஒரு லிங்கையும் க்ளிக் செய்ய கூடாது. சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.