சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசம்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் பற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், "சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான். அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இதுதொடர்பாக எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்?" என்று காவல் துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு காவல் துறை தரப்பு பதிலளிக்கையில், "சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பதால்தான் இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வி.ஏ..ஓ அளித்த புகாரின் பேரில்தான் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதன் மீது இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய சி.வி.சண்முகத்தின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.