கியூட் நுழைவுத்தேர்வு: 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


கியூட் நுழைவுத்தேர்வு: 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

கியூட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் கியூட் (CUET) நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் கியூட் நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களால் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை!

தமிழகத்தில் 2021-இல் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஜே.இ.இ கூட்டு நுழைவுத் தேர்விலும் இதே நிலை ஏற்பட்டது!

பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதால், ஜே.இ.இ கூட்டு நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு தரப்பட்டது. அதே முயற்சி இப்போதும் மேற்கொள்ளப்பட வேண்டும்!

கியூட் நுழைவுத்தேர்வு மட்டுமின்றி, அடுத்து நடைபெறவுள்ள நீட் தேர்விலும் இதே சிக்கல் ஏற்படக் கூடும். எனவே, இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும்!" என்று கூறியுள்ளார்.


Next Story