கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேருக்கு டிசம்பர் 6-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்கள்


கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேருக்கு டிசம்பர் 6-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு - காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்கள்
x

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேருக்கு டிசம்பர் 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இவர்கள் கோவையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சென்னை

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் கடந்த 8-ந்தேதி ஆஜர்படுத்தினர். 6 பேரையும் 22-ந்தேதி(அதாவது நேற்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். பின்னர் 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேரையும் மீண்டும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் பாதுகாப்பு கருதியும், 6 பேரையும் அழைத்து வருவதில் அதிக நேரம் விரையம் ஆவதாலும் கோவை சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் 6 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை 6 பேரையும் கோவை சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேருக்கும் டிசம்பர் 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இவர்கள் 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கோவையில் இருந்து நேரில் அழைத்துவர என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.


Next Story