கடலூர் துறைமுகம் ரூ.100 கோடியில் சீரமைப்பு


கடலூர் துறைமுகம் ரூ.100 கோடியில் சீரமைப்பு
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகம் ரூ.100 கோடியில் சீரமைக்கப்பட்டது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர்:

கடலூர் மீன்பிடி துறைமுகம் மிகவும் பழைமையான துறைமுகங்களில் ஒன்றாகும். இதனை ரூ.100 கோடியில் சீரமைக்கும் பணி கடந்த 24.1.2020 அன்று தொடங்கியது. துறைமுகத்தில் 1900 மீட்டர் நீளம் உள்ள படகு நிறுத்தும் தளம் உள்ளது. இதில் 300 விசைப்படகுகள், 600 சிறியரக நாட்டுப்படகுகள் நிறுத்தலாம்.

இது தவிர மீன்களை ஏலம் விடுவதற்கு ஏதுவாக 2 கூடங்கள், மீன்பிடி வலைகளை பின்னுவதற்கும், சீரமைப்பு பணிகள் நடக்கவும் 4 கூடங்கள் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி, 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி, படகுகளுக்கு டீசல் நிரப்புவதற்கு வசதியாக 2 பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் திறப்பு

நவீனப்படுத்தப்பட்டுள்ள கடலூர் துறைமுகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கடலூர் மண்டல மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் தலைமை தாங்கினார். துறைமுக கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் முருகேசன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாநகர மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றினர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர், சரத் தினகரன், தமிழரசன், கர்ணன், பாருக்அலி, சுமதி ரங்கநாதன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், மீன்வளத்துறை ஊழியர்கள், சாகர் மித்ரா பணியாளர்கள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள், மீனவர் கிராம நிர்வாகிகள், படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மீன்பிடி இறங்குதளம்

இதேபோல் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மீன்வளப்பயிற்சி மற்றும் அலுவலக கட்டிடம், சி.புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம், லால்பேட்டையில் புதிய சினை மீன் பண்ணை ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


Next Story