பொதுமக்களின் நேர்மையான கோரிக்கைகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்கடலூர் புதிய கலெக்டர் அருண்தம்புராஜ் பேட்டி


பொதுமக்களின் நேர்மையான கோரிக்கைகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்கடலூர் புதிய கலெக்டர் அருண்தம்புராஜ் பேட்டி
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் நேர்மையான கோரிக்கைகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்

புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாலசுப்பிரமணியம் தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக இருந்த டாக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அதில் உள்ள குறைபாடுகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். பொதுமக்கள் அளிக்கும் நேர்மையான கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடலூர் மீன்வளம் சார்ந்த மாவட்டமாக இருப்பதாலும், விவசாயிகள் அதிகளவில் இருப்பதாலும் அவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி

தொடர்ந்து புதிய கலெக்டர் அருண் தம்புராஜிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் மதுபாலன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கலெக்டராக பொறுப்பேற்ற அருண் தம்புராஜிக்கு தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். கலெக்டரான அருண் தம்புராஜின் தந்தை அசோக், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டாவார். எம்.பி.பி.எஸ். படித்துள்ள அருண் தம்புராஜ் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். ஆனார். தொடர்ந்து சப்-கலெக்டராக இருந்த அவர், கடந்த 17.6.2021 முதல் கடந்த 16-ந் தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி உள்ளார்.

133-வது கலெக்டர்

கடலூர் தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது 1801-ம் ஆண்டு ஹாரி டெய்லர் என்பவர் முதல் கலெக்டராக இருந்தார். அதன்படி பார்த்தால் கடலூர் மாவட்டத்தின் 133-வது கலெக்டராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்றுள்ளார்.

30.9.1993-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் தென்னாற்காடு வள்ளலார் மாவட்டமாக உதயமானது. இதன்படி கடலூர் மாவட்டத்தின் 23-வது கலெக்டராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story