ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் மாநகராட்சி ஊழியர் கைது


ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் மாநகராட்சி ஊழியர் கைது
x

கடலூர் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர், தனியார் நிறுவன உரிமையாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்க, லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 15.3.2023 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலூர் மாநகராட்சியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் கட்டிட அனுமதி மற்றும் மனைபிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் அனைத்தும் புதுப்பாளையத்தில் உள்ள பங்கஜம் பிளானர்ஸ், பாரதி சாலையில் உள்ள ஆல்பா அசோசியேட்ஸ் ஆகிய 2 தனியார் நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

உரிமம் ரத்து

இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில் அரசு அலுவலர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர்கள் ஆறுமுகம், முருகுமணி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து கடந்த 17.3.2023 அன்று மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்புத்துறையால் 2 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட என்ஜினீயர் தரம்-3 உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர், மாநகராட்சி இளநிலை உதவியாளர் ஆகிய 2 பேர் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

இளநிலை உதவியாளர்

கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மகன் பரணி (வயது 33). காப்பீட்டு நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியில் தனது தந்தைக்கு சொந்தமான காலி மனையில் வீடு கட்ட முடிவு செய்தார்.

இதற்காக கட்டிட அனுமதி கேட்டு கடலூர் மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் ரகோத்தமனிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவர், புதுப்பாளையத்தில் இயங்கி வரும் பங்கஜம் பிளானர்ஸ் உரிமையாளர் ஆறுமுகத்தை சந்தித்து, அவர் மூலமாக கட்டிட அனுமதி பெறுமாறு கூறியதாக தெரிகிறது.

அதன்பேரில் பரணி, ஆறுமுகம் மூலம் ஆன்லைனின் பதிவு செய்தார். பின்னர் ஆறுமுகம், ரகோத்தமனை சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன்படி பரணி இளநிலை உதவியாளர் ரகோத்தமனை சந்தித்து பேசி உள்ளார். அப்போது, அவர் கட்டிட அனுமதி பெற ரூ.20 ஆயிரத்தை ஆறு முகத்திடம் கொடுத்தால், அந்த பணம் எங்களுக்கு வந்துவிடும், அதன்பிறகு தான் கட்டிட அனுமதி கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது.

2 பேர் கைது

ஆனால் லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத, பரணி இது பற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனு அளித்தார். அதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சுந்தரராஜன், அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று பங்கஜம் பிளானர்ஸ் நிறுவனத்தில் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

அப்போது போலீசார் கூறியபடி, ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்ற பரணி, அங்கிருந்த ஆறுமுகத்திடம் கொடுத்தார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்தபடி நின்று கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கிருந்த ரகோத்தமனையும் கைது செய்தனர்.

வீட்டிலும் சோதனை

தொடர்ந்து அவர்கள் 2 பேரையும், கடலூர் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி அறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இந்த விசாரணை மாலை 3.45 மணி வரை நடந்தது. அதன்பிறகு ஆறுமுகத்தை நத்தவெளி ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.

மேலும் வீட்டில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story