183 ஆண்டு பழமையானது கடலூர் அரசு ஆஸ்பத்திரியை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் ஓங்கி ஒலிக்கும் பொதுமக்களின் குரல்
183 ஆண்டு பழமையான கடலூர் அரசு ஆஸ்பத்திரியை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி பழமை வாய்ந்தது. இந்த ஆஸ்பத்திரி கடந்த 1840-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு கால கட்டத்தில் இந்த ஆஸ்பத்திரி ஒரு சிறிய குடிசையில் தான் செயல்பட்டு வந்தது.
1907-ம் ஆண்டு கடலூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நகராட்சி ஆஸ்பத்திரியாக செயல்பட தொடங்கியது. ஆனாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயிற்சி பெற்ற நர்சுகள் யாரும் இல்லை. அப்போது பாரீஸ் நாட்டை சேர்ந்த லூப்ரே என்பவர் நகராட்சி உறுப்பினராக இருந்தார். அவர் நகராட்சி தலைவராக இருந்த சுப்புராயலு ரெட்டியாரிடம் பாரீசில் இருந்து திறமை வாய்ந்த 2 நர்சுகளை அழைத்து வர நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். இதற்கு நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து பாரீசில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டியூட்டில் இருந்து 2 நர்சுகள் வரவழைக்கப்பட்டனர். அந்த காலத்தில் விமான போக்குவரத்து கிடையாது என்பதால் கப்பல் மூலம் வரவழைக்கப்பட்டனர். அதன்படி ஒரு மாதம் கழித்து அந்த 2 நர்சுகளும் கடலூர் வந்து சேர்ந்தனர். இந்த 2 நர்சுகளும் புனித மரியன்னை இல்லத்தில் தான் தங்கியிருந்தனர். இவர்களின் சிகிச்சை ஆஸ்பத்திரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
அரசு ஏற்றது
சென்னை மாநில கவர்னராக இருந்த சர்ஆர்துலாலே என்பவர் 1911-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடலூர் வந்தார். அப்போது கடலூர் நகராட்சி ஆஸ்பத்திரியை பார்வையிட்ட அவர், பாரீசில் இருந்து வந்த 2 நர்சுகளும் சிகிச்சை அளிக்கும் முறையை பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பிறகு மாவட்ட கலெக்டராக இருந்த லாங்சர், இந்த நகராட்சி ஆஸ்பத்திரியை அரசு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 1918-ம் ஆண்டு இந்த ஆஸ்பத்திரியை அரசு ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி காமராஜர் ஆட்சி காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இங்கு நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் 1920-ம் ஆண்டு பாரீஸ் நாட்டில் இருந்து மேலும் 2 நர்சுகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி புதிய கட்டிடம் கட்டப்பட்டது. (தற்போது மருந்து சீட்டு வாங்கும் கட்டிடம்), தற்போது வரை பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. படிப்படியாக வளர்ந்து இன்று கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
23 துறைகள்
தற்போது இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, கண், காது, மூக்கு, தொண்டை, காசநோய், அவசர சிகிச்சை பிரிவு, தீவிர பச்சிளங்குழந்தைகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை, இருதய நோய் பிரிவு, ரத்தம் சுத்திகரிப்பு பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, முடநீக்கியல் பிரிவு, மனநோயாளிகள் பிரிவு, நுண்கதிர் பிரிவு, விஷ முறிவு சிகிச்சை மையம், ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு உள்பட23 துறைகள் உள்ளன.
ஆனால் இந்த பிரிவுகள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்தாலும், இந்த பிரிவுகள் துறையாக செயல்பட்டால் தான் மக்களுக்கு முழுமையான மருத்துவ சேவை அளிக்க முடியும். இருப்பினும் இங்கு தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பரிந்துரை
பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் வெளி ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகளை அனுப்பும், பரிந்துரைக்கும் ஆஸ்பத்திரியாக தான் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி இருந்து வருகிறது. விபத்தில் காயமடைந்த நோயாளிகளை பெரும்பாலும் அண்டை மாநிலமான புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் பல்வேறு தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
இதனால் இந்த ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யும் (ரெபர்) ஆஸ்பத்திரி என்று கிண்டல் செய்யும் அளவுக்கு உள்ளது. இங்கு கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் டாக்டர்கள், நர்சுகள் வேலை பார்த்து வந்தனர்.
இன்றும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் உண்மையான தியாகம் வெளியே தெரிய வேண்டும் என்றால் இந்த அரசு தலைமை ஆஸ்பத்திரியை பல்நோக்கு, அதாவது மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றினால், மருத்துவ மாணவர்களுக்கு கற்பித்தலோடு, தரமான சிகிச்சையும் அளிக்க ஏதுவாக இருக்கும்.
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக்க வேண்டும்
அதோடு, ஆஸ்பத்திரிக்கு என்று முதுநிலை பிரிவுகள், உயிர் காக்கும் உயர் உபகரணங்கள், கூடுதல் டாக்டர்கள், பணியாளர்கள் கிடைக்கும். நவீன கருவிகளையும் வாங்க முடியும். ஆகவே அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதோடு, அறுவை சிகிச்சைகளையும் செய்ய முடியும். தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை அரசு ஆஸ்பத்திரியாக மாற்றினாலும், கடலூர் மாவட்ட தலைமையிடத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தினால் தான் சிறப்பாக இருக்கும். அதுவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
கடலூர் இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டமாக உள்ளது. இதனால் இந்த அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தினால் நோயாளிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இது பற்றி டாக்டர், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
இருதய நோய் டாக்டர் இல்லை
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில பொருளாளர் டாக்டர் கேசவன்:-
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை அரசு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு உள்ளது. இருப்பினும் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரிக்கு இணையான சேவையை அளித்து வருகிறது. இங்கு சுமார் 900 படுக்கை வசதிகளுடன் அனைத்து வசதிகள் இருந்தாலும் இருதய நோய் டாக்டர் இல்லை. முன்பு விழுப்புரத்தில் இருந்து டாக்டர் வந்து சென்றார். தற்போது அவரும் வருவதில்லை. இதேபோல் பல்வேறு பிரிவுகளுக்கு துறைகள் அமைத்து, ஒரு மருத்துவக்கல்லூரியாக மாற்றினால் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்வதற்கு தேவையில்லை. இதற்கு அரசு உரிய பரிசீலனை செய்ய வேண்டும்.
அடிக்கல் நாட்டியும் பயனில்லை
கடலூர் அமர்நாத்:- கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி அமைக்க எம்.புதூரில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி அமைக்கப்படவில்லை. கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு நாள் தோறும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இருதய நோய்கள், நரம்பியல் சிகிச்சைகளுக்கு வெளி ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யும் நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆகவே கடலூரில் அரசு தலைமை ஆஸ்பத்திரியை மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றினால் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
படுக்கை வசதி இல்லை
கடலூரை சேர்ந்த அறிவுக்கரசு:- ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக தான் அரசு ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகிறது. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருதயம், நரம்பியல் போன்ற சிகிச்சைகளுக்கு புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் தனியார் ஆஸ்பத்திரிகள் எதுவும் செயல்படாது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் நோயாளிகள் வருகின்றனர். அப்போது பயிற்சி டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் படுக்கை வசதி இல்லாமல் கீழே படுக்க வைத்து வைத்தியம் பார்க்கும் நிலை உள்ளது. ஆகவே கூடுதல் படுக்கை வசதி அமைப்பதோடு இந்த அரசு ஆஸ்பத்திரியை மருத்துவ க்கல்லூரியாக தரம் உயர்த்தினால் அனைத்து சிகிச்சைகளும் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும்.