கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு


கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
x

கோவையில் கார் வெடித்து மர்ம நபர் இறந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் தீவிரமாக சோதனை செய்தனர்.

கடலூர்

கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே ஈஸ்வரன் கோவில் தெருவில் நேற்று அதிகாலை சென்ற கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கார் 2 துண்டானது. காரில் இருந்த மர்ம நபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். இந்த காரில் பால்ரஸ் குண்டுகள் சிக்கியதால், இந்த விபத்து சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் 7 உட்கோட்டங்களிலும் அந்தந்த உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வெடி குண்டு சோதனை

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி முதல் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை மறித்து, சந்தேகமான முறையில் யாராவது வருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடி குண்டு சோதனை நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வாகனங்களில் சோதனை நடத்தினர். மோப்ப நாய் மூலமாகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர 127 தங்கும் விடுதிகளில் சந்தேகமான முறையில் வெளிநபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்றும் சோதனை செய்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலைகள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் யாராவது சந்தேக நபர்கள் ஊடுருவி உள்ளார்களா? என்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story