தீபாவளி இனிப்பு தயாரிப்பு தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை


தீபாவளி இனிப்பு தயாரிப்பு தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
x

கோப்புப்படம்

தீபாவளி இனிப்பு தயாரிப்பு தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடலூர்,

தீபாவளி இனிப்பு தயாரிப்பு தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

தீபாவளியுடன் இணைந்தது இனிப்பு மற்றும் கார வகைகள். தீபாவளியில் இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதேபோல இனிப்பு மற்றும் கார வகைகளை கலப்படம் இல்லாமல் சுத்தமான பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.

உணவு தயாரிக்க கலப்பட பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான கலர் பவுடர்களையோ பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதேபோல உணவு பொருட்களை பொட்டலம் இடும்போது தயாரிப்பாளரின் முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் உரிம பதிவு எண்ணையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். சுத்தமான முறையில் தூசு படாத வகையில் உணவு பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

தீபாவளி நேரங்களில் அதிகாரிகள் என்ற போர்வையில் வேறு யாரேனும் வந்து சோதனையில் ஈடுபடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடைக்காரர்கள், வருகிற அதிகாரிகளுடைய அடையாள அட்டையை காண்பிக்க கூறி, அதன் பிறகே சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸப் எண்ணுக்கு புகார் அளிக்க வேண்டும். தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் தரமான பொருட்கள் மற்றும் சுத்தமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story