இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

கடலூர் பழைய வண்டிப்பாளையம் ராமராஜ தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). இவர் தனது உறவினர் தண்டபாணி என்பவரது இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு கடலூர் நகராட்சியாக இருந்தபோது, நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த ராமனை (47) அணுகியுள்ளார். அப்போது அவர் தனக்கு லஞ்சமாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகரன், இதுபற்றி கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி குணசேகரன், கடந்த 27.10.2016 அன்று கடலூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ராமனிடம் ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், ராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

3 ஆண்டு சிறை

மேலும் இதுதொடர்பாக கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பிரபாகர், தனது தீர்ப்பில், லஞ்சம் வாங்கிய ராமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.


Next Story