கல் உப்பு விளைச்சல் அதிகரிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வாலிநோக்கம் பகுதியில் உப்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.
சாயல்குடி,
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வாலிநோக்கம் பகுதியில் உப்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.
உப்பு உற்பத்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்கான உப்பள பாத்திகள் சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆனைகுடி, கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை, பத்தநேந்தல் உள்ளிட்ட ஊர்களில் அதிக அளவில் உள்ளன. ஆண்டுதோறும் கோடைகால சீசன் தொடங்கியவுடன் பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி சீசன் தொடங்கிவிடும். வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக உப்பு உற்பத்தி முடிவடைந்து விடும்.
இந்த ஆண்டு உப்பு உற்பத்தி சீசன் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. உப்பு உற்பத்தி தொடங்கியதை தொடர்ந்து வாலிநோக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 500-க்கும் மேற்பட்ட உப்பள பாத்திகளில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தரமாக உள்ளது
தற்போது கடந்த 2 வாரத்திற்கு மேலாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருவதால் பாத்திகளில் உப்பு உற்பத்தியின் விளைச்சலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பாத்திகளில் இருந்து கல் உப்புகளை பிரித்து எடுத்து தூத்துக்குடி மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து உப்பள தொழிலாளி ஒருவர் கூறும்போது, மே மாத முதல் வாரத்தில் தொடர்ந்து பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக உப்பு விளைச்சல் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிக வெள்ளை நிறத்திலும் தரமான உப்பாகவே கிடைத்து வருகின்றது.
கல் உப்பு
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரிகளில் ஏற்றப்பட்டு கல் உப்புகளாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இதை தவிர அரசு உப்பு நிறுவனத்தில் உள்ள தொழிற்சாலைக்கு கல் உப்புகள் அனுப்பப்பட்டு அங்கு மிஷினில் அரைத்து அயோடின் சால்ட் உப்புகளாகவும் பாக்கெட்டுகளில் அடைத்தும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் வாலிநோக்கம் பகுதியில் உள்ள தனியார் உப்பள பாத்திகளிலும் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.