'கிரிப்டோ கரன்சி' மோசடி செய்தவரை கடத்தி ஓட்டலில் சிறை வைத்து அடி-உதை
‘கிரிப்டோ கரன்சி’ மோசடி செய்தவரை காரில் கடத்தி ஓட்டலில் சிறை வைத்து அடித்து உதைத்தனர். இதில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர், 'கிரிப்டோ கரன்சி' முதலீடு செய்யும் தொழில் செய்து வந்தார். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் பலமடங்கு பணம் கிடைக்கும் என கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டதால் அதனை நம்பி இவரிடம் ஏராளமானவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தினேஷ் (37) என்பவர் சந்திரசேகரிடம் வேலை செய்து வந்தார். இவரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். மேலும் தனது நண்பர்களான ராஜ்குமார் உள்பட மேலும் சிலரையும் சந்திரசேகரின் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி சந்திரசேகர் யாருக்கும் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணத்தை இழந்தவர்கள், இந்த மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
இதற்கிடையில் தினேஷ்பாபுவின் நண்பர்கள், தாங்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தினேஷ், தனது நண்பர்களான ராஜ்குமார், சுரேஷ் உள்ளிட்டோருடன் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று, போரூரில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் சிறை வைத்தனர். அங்கு அவரிடம் தங்களது பணத்தை கேட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் திருவொற்றியூரில் உள்ள அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் வீட்டில் நிறுத்தி இருந்த அவரது சொகுசு காரை பறித்ததுடன், அதனை பெயர் மாற்றம் செய்யும் பத்திரத்தில் சந்திசேகரிடம் கையெழுத்து வாங்கினர். பின்னர் அவரை மாதவரத்தில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் காயம் அடைந்த சந்திரசேகர், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இதுபற்றி மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவானந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கடத்தி தாக்கிய தினேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள அவருடைய நண்பர்களான சுரேஷ், ராஜேஷ், மோகன், வினோத் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.