கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: படகில் சென்று அ.தி.மு.க. நூதன போராட்டம்


கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: படகில் சென்று அ.தி.மு.க. நூதன போராட்டம்
x

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது.

எண்ணூர்,

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது. இந்த கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரில் கலந்து, எண்ணூர் கடலிலும் கலந்ததால் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்படுகிறது.

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடலோர காவல் படையினர் எண்ணெய் கழிவுகளை அழிப்பதற்காக ரசாயன பொடிகளை கடலில் தூவி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், அக்கட்சியினர் மற்றும் மீனவர்களுடன் காட்டுக்குப்பம் பகுதியில் பைபர் படகில் கடலுக்குள் சென்று கச்சா எண்ணெய் கடலில் கலந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும்போது, "மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒரு புறம் இருந்தாலும், வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் மற்ற தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால்தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். கடலிலும், நிலப்பரப்பிலும் படிந்துள்ள கச்சா எண்ணெயை உடனே அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.


Next Story