திருவாரூர் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்
திருவாரூர் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்
அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கமலாலய குளம்
திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு மேற்கு பக்கம் கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தை ஆதிதீர்த்தம் என்றும் கூறுவார்கள். அதனால் காசியின் கங்கையை விட மேலான புண்ணியம் கொடுக்கக்கூடிய தீர்த்தகுளமாக இந்த குளம் விளங்குகிறது. குளத்தில் நீராடினால் தேவ தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
தர்ப்பணம்
இந்த குளத்தில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது. நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்குவது வழக்கம்.
அதன்படி நேற்று அமாவாசையையொட்டி கமலாலய குளத்தில் காலையில் இருந்து திரளான ெபாதுமக்கள் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனால் காலை முதல் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.