புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் திரளானவர்கள் பங்கேற்பு-தேவாலயங்களில்சிலுவைப்பாதை வழிபாடு


ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். பல்வேறு தேவாலயங்களில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். பல்வேறு தேவாலயங்களில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனிதவெள்ளி

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனிதவெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும்போதும், அதில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

சிலுவைப்பாதை

திருவண்ணாமலை ஆற்காடு லுத்தரன் தேவாலயம், சாரோனில் உள்ள தேவாலயம், தேனிமலையில் உள்ள ஏசு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள உலகமாதா தேவாலயத்தில் நேற்று காலை சிலுவை பாதை வழிபாடு நடந்தது. பங்கு தந்தை ஞானஜோதி தலைமையில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி சென்று உலக மாதா ஆலயத்தில் 14 இடங்களில் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு பிராத்தனை மற்றும் கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் ஏசுநாதர் போல் வேடம் அணிந்த ஒருவரை சிலுவை சுமக்க வைத்து அடித்து இழுத்து வருவது போலவும் தொடர்ந்து அவர் சிலுவை சுமப்பது போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனையடுத்து அவரை சிலுவையில் அறைந்த பிறகு கல்லறையில் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கீழ்நாத்தூரில் பங்குதந்தை ஸ்டீபன் தலைமையில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. தென்கரும்பலூர், விருதுவிலங்கினான், தலையாம்பள்ளம், சோவூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்..

நாளை ஈஸ்டர்

ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.


Next Story