கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுலா பயணிகள் அணிவகுத்து நின்றன.
குளு, குளு சீசன்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசனுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. மாலை நேரத்தில் மழை பெய்து குளிர்ச்சியான சூழலும் ஏற்படுகிறது. இதுதவிர கொடைக்கானலில் வருகிற 26-ந்தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
இதையொட்டி கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் வார விடுமுறை, ெதாடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அந்த வகையில் நேற்று வார விடுமுறை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
5 கிலோமீட்டர் தூரம்
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால், கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும், வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி, நாயுடுபுரம் உள்ளிட்ட இடங்களிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
பின்னர் போக்குவரத்து போலீசார் மற்றும் கூடுதலாக நியமிக்கப்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களுக்கு சென்றனர்.
படகு சவாரி
கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பைன்மரக்காடு, மதிகெட்டான்சோலை, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வண்ண பூக்களை கண்டுகளித்தனர். அத்துடன் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்துக்கொண்டனர்.
மேலும் நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றுகளை பார்த்து ரசித்தபடி படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த அருவிகளையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.