கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.

இந்தநிலையில் தற்போது சபரிமலை சீசன் காலம் மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்று அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் சூரியன் உதயமாகும் காட்சியை தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

படகு துறையில்...

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்பினர்.

இதேபோல், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

திற்பரப்பு அருவி

புகழ்பெற்ற சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. வார விடுமுறைநாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வருகை தந்தனர். அவர்கள் விடுதிகளில் தங்கி இருந்து காலை, மாலை என தொடர்ந்து அருவியில் குளித்து மகிழ்தனர்.

பின்னர், அருவியின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

-----


Next Story