ஈரோடு பஸ், ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


ஈரோடு பஸ், ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x

தொடா் விடுமுறையால் ஈரோடு பஸ், ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு மற்றும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சேலம், கோவை செல்லும் பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் மதுரை, நெல்லை செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். குறிப்பாக கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதேபோல் பல்வேறு வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்தவர்களும் தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டிற்கு தங்களது குடும்பத்துடன் வர தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நேற்றும் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.


Next Story