சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் புகழ்பெற்ற அருள்மிகு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்களான வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பின்னர், கோவிலில் வாரவிடுமுறை நாட்களிலும், சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மாசி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
எனவே கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம், பொது தரிசனம் என அனைத்து தரிசன வரிசையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் இந்த வரிசை கோவிலில் இருந்து நெடுஞ்சாலை வரையில் நீண்டு காணப்பட்டது. இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.