பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்
சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பயிர் பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் ஏற்கனவே பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடிக்கான வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் எதிர்பாராத புயல்சீற்றம், கனமழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் தங்களை இணைத்துக் கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பு ரபி பயிர் பருவத்தில் வேலூர் மாவட்டத்துக்கு சம்பா, நவரை நெல் ரகங்களுக்கும், கரும்பு உள்ளிட்ட 3 பயிர்களுக்கு காப்பீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. மேலும் அரசு, இப்போ டோக்கியோ காப்பீடு நிறுவனத்தின் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது.
காப்பீடு தொகை
விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு, அறுவடைக்கு பிந்தைய இழப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பயிர் காப்பீடு செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் காப்பீடு தொகையை செலுத்தலாம்.
எனவே வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.