கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் பயிர்கள் நாசம்
காரியாபட்டி அருகே கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் பயிர்கள் நாசமானது. நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் பயிர்கள் நாசமானது. நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தக்காளி சாகுபடி
காரியாபட்டி அருகே உள்ள அரசகுளம் கிராமத்தில் நெல், வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதியானது வானம் பார்த்த பூமியாகும். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்தின் கீழ் வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர அமைச்சர் தங்கம்தென்னரசு தீவிர முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கும் மேலாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு மாங்குளம், குரண்டி, ஆவியூர், அரசகுளம் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகமாகி அனைத்து கண்மாய்களும் நிரம்பியது.
மறுகால் பாயும் கண்மாய்
இதையொட்டி அரசகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்து பெருகி வருகிறது. கண்மாய் மறுகால் பாயும் நிலையில் உள்ள நிலையில் நீர்பிடிப்பு பகுதியையொட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், நெல் போன்ற பயிர்கள் அறுவடை செய்யும் நேரத்தில் கண்மாய் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் கண்மாயிலிருந்து நீர் செல்லும் வழிதடம் இல்லாததால் விவசாய விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கண்மாய் தண்ணீர் வயலுக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.