பயிர் கடன் வழங்க வேண்டும்
காரியாபட்டி பகுதியில் பயிர் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி தாலுகா பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் முழுவதும் விவசாய பகுதிகளாகும். இந்த பகுதியில் மழை பெய்தால் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகள் வயலில் நடவு செய்வதற்கு நெல் நாற்று போட்டு வைத்தனர்.
நெல் நாற்று போட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மழை இல்லாததால் நாற்று முழுவதும் நடவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு சில விவசாயிகள் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து வயலில் நடவு செய்து வருகின்றனர். மற்ற விவசாயிகள் மழைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.உரிய காலத்தில் மழை பெய்யாததால் இந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் கவலையில் உள்ளனர். போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து நடவு செய்யும் விவசாயிகள் உரம் போட கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆதலால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நாற்று நடவு செய்த விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.