விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை


விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

சாயல்குடியில் ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சமூக நல்லிணக்க ஈகை பெருநாள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் த.மு.மு.க. தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நஜீபூர் ரகுமான், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சம்சுகனி வரவேற்றார். மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

த.மு.மு.க. மாநில தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, நவாஸ் கனி எம்.பி., மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான், திரைப்பட இயக்குனர் ராஜராஜா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பேசினர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நல வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார்.

பயிர் காப்பீடு

அவர் பேசுகையில், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய 3 ஒன்றியங்களை பிரித்து சாயல்குடி, சிக்கல் என 5 ஒன்றியங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதுகுளத்தூர் தொகுதியில் பராமரிப்பு இன்றி உள்ள அனைத்து கால்வாய்களும் சரி செய்யப்பட்டு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை இப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

முதுகுளத்தூர் பகுதியில் வைகை தண்ணீரை கண்மாய்களுக்கு கொண்டு வந்தது போல் கடலாடி, சாயல்குடி பகுதிகளுக்கும் வைகை நீரை கொண்டு வந்து ஒரு போக விவசாயத்திற்கு இப்பகுதி விவசாயிகளுக்கு வழிவகை செய்யப்படும். மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பயன்படுத்துவது போக பயனற்று உள்ள 3000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், த.மு.மு.க. மாநில தலைமை பிரதிநிதி உசைன் கனி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குலாம் முகைதீன், ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், பூபதி மணி, கோவிந்தராஜ், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித், மணிகண்டன், த.மு.மு.க. மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் மற்றும் த.மு.மு.க., ம.ம.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சாயல்குடி த.மு.மு.க. நகர் செயலாளர் சேக் முகமது நன்றி கூறினார்.


Next Story