விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
பயிர் காப்பீடு
நாமக்கல் மாவட்டத்தில் நெல் (சம்பா), உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, சோளம், கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, தக்காளி மற்றும் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுபிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து பயன் அடையலாம்.
இத்திட்டத்தின் கீழ் பிரிமிய தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல் (சம்பா) பயிருக்கு ரூ.347.53-ஐ வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.128.03-ஐ நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.312.70-ஐ டிசம்பர் 31-ந் தேதிக்குள்ளும், பச்சைபயறு மற்றும் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.207.48-ஐ நவம்பர் 15-ந் தேதிக்குள்ளும், கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,914.60-ஐ அடுத்த ஆண்டு மார்ச் 30-ந் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.
வெங்காயம்
மேலும் தோட்டக்கலை பயிர்களான சின்ன வெங்காயம் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.2,050.10-ஐ நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும், வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1,857.44-ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு உள்ளும், தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ1,017.64-ஐ ஜனவரி 31-ந் தேதிக்குள்ளும் மற்றும் மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1548.70-ஐ வருகிற பிப்ரவரி மாதத்திற்கு உள்ளும் செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பிரிமியத் தொகையை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரிமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.