தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் -முதல்-அமைச்சர் உறுதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று சட்ட சபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலம் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சட்டசபையில் விவாதம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீதும், அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்ற அரசு தீர்மானத்தை நேற்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), சிந்தனைச்செல்வன் (விடுதலைசிறுத்தைகள் கட்சி), ஜி.கே.மணி (பா.ம.க.), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோர் பேசினார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர், 'தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, தான் தொலைக்காட்சியை பார்த்தே தெரிந்துகொண்டதாக அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நிமிடத்துக்கு நிமிடம் அங்கு நடைபெற்ற நிகழ்வு குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவித்தோம் என்று ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த சம்பவத்துக்கு முழுப் பொறுப்பு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். போலீஸ் அதிகாரிகள் மீது மட்டுமல்லாது, எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தி பேசினார்கள்.
அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வரலாற்றில் கரும்புள்ளி
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடானது தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி. அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதிவழியில், மிகத் தொடர்ச்சியாக பல்லாண்டு காலமாக தூத்துக்குடி மண்ணில் நடந்த போராட்டமாகும். இதை மேலும் வலியுறுத்தும்வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மாபெரும் ஊர்வலத்தை அந்தப் பகுதி மக்கள் நடத்தினார்கள். மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கவே அவர்கள் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அன்றைய அ.தி.மு.க. அரசு சரியாக கையாளவில்லை. ஊர்வலமாக வந்த மக்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்துகளை கேட்டறிய தயாராக இல்லை.
திட்டமிட்டு நடத்தப்பட்டது
அதுமட்டுமல்லாமல், ஊர்வலமாக வந்த மக்கள் மீது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி, கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து அறிக்கை கொடுத்திருக்கிறது. அந்தச் சம்பவத்தில் 13 பேர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 40 பேர் பலத்த காயமும், 64 பேர் சிறுகாயமும் அடைந்தார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. இதுகுறித்து அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, 'இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது. உங்களைப் போல நானும் டி.வி. பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
உண்மைக்கு மாறான தகவல்
'உள்துறையை கையில் வைத்திருந்த முதல்-அமைச்சர் பேசும் பேச்சா இது?' என்று நாடே கோபத்தால் கொந்தளித்தது. அந்தளவுக்கு மிகப்பெரிய, உண்மைக்கு மாறான தகவலை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்குப் பேசியிருக்கிறார்.
அப்படி அவர் சொன்னது மிகப் பெரிய தவறு என்று அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லிவிட்டது. நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட 2 அறிக்கைகளுமே, அவர்கள் அமைத்த ஆணையங்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகளாகும்.
வலுவான ஆதாரம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்திடம் இருக்கும் மிக வலுவான ஆதாரம், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அன்றைய டி.ஜி.பி. ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.
தவறான கருத்து
எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்துகொண்டதாக அவர் கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்.
நீதிபதி அருணா ஜெகதீசனின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தி.மு.க. அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அதைப் பற்றி இங்கே பேசிய பல உறுப்பினர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 பேருக்கு, அவர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில் கொண்டு, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கவனமாக பரிசீலனை
விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை 18.5.2022 அன்று அரசிடம் அளித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துகள், பரிந்துரைகளை கவனமாக பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். கலவரம் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதைக் கையாண்ட முறை, கலவரத்துக்குப் பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆணையத்தின் முடிவுகளும், பரிந்துரைகளும் அரசால் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த விசாரணை அறிக்கை குறித்து 29.8.2022 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தோம். அந்த அடிப்படையிலேதான் இந்த அவையில்கூட அந்த அறிக்கையை தாக்கல் செய்தோம். ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்.
தூத்துக்குடி கலெக்டர் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையைச் சேர்ந்த 3 வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. உள்துறை மூலமாக, அப்போதைய தென்மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 3 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படும்.
தண்டிக்கப்படுவார்கள்
ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம். நிர்வாகத்தை நடத்தக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கை காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்துகொள்வது மனிதத்தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும்.
அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஏதோ இப்போது சொல்கிற உறுதிமொழி அல்ல. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிதான். யார் யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.